கும்பம்
நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பீர்கள். பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால்
பிள்ளைகளால் அமைதி உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த படி வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால்
மனநிம்மதி கிட்டும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், மனஇறுக்கம், காரியத் தாமதம் வந்து செல்லும். பெற்றோருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். செவ்வாய் 3ல் வலுவாக
தொடர்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். ராகுவும் 5ம் வீட்டிலேயே
தொடர்வதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்து கொண்டேயிருக்கும். கேதுவும், சனியும் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களைச்
சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நெடுநாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களையும் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளே! விட்டுக் கொடுத்துப் போக வேண்டி வரும். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த
நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். மாணவர்களே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். பெற்றோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். ஆர்வக்கோளாறால்
முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். இருப்பதை வைத்து சமாளிக்கப் பாருங்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரியைப் பற்றிக் குறை கூற வேண்டாம். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே வசதி, வாய்ப்புகள் உயரும். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது.
விவசாயிகளே பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக் காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்க வேண்டிய மாதமிது. ராசியான தேதிகள்:17, 18, 19, 20, 26, 27, 28 மற்றும் மார்ச் 1, 3, 8, 9, 11, 13. சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 21ம் தேதி பிற்பகல் 1மணி முதல் 22, 23ம் தேதி மாலை 4.25 மணி வரை.