Friday, January 20, 2017

சாதித்த கோஹ்லி.. 7 விக்கெட் அள்ளிய ஜடேஜா..!-Share

சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரிக்கெட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்கள் குவித்தது.

இதற்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இது இங்கிலாந்தின் ஓட்டங்களை விட 282 ஓட்டங்கள் கூடுதலாகும்.

கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 303 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு முன்னதாக லோகேஷ் ராகுல் 199 ஓட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டாசன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதன் பின்னர் 282 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

ஜென்னிங்ஸ் 12 ஓட்டங்களுடனும், அலஸ்டர் குக் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியை ’டிரா’ செய்யும் நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஜடேஜா இங்கிலாந்தை சுழலில் மிரட்ட ஆரம்பித்தார். நிதானமாக ஆடி வந்த தொடக்க வீரர்கள் ஜென்னிங்ஸ் (54), குக் (49) இருவரையும் வீழ்த்திய ஜடேஜா தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தார்.

இவரின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி 207 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என கைப்பற்றியது.

அபாரமாக செயல்பட்ட ஜடேஜா 7 விக்கெட்டுகளை அள்ளினார். இஷாந்த், உமேஷ், மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.