Friday, January 20, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் கடல் உற்பத்தியானது 2016ம் ஆண்டில் பாரிய வீழ்ச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் கடல் உற்பத்தியானது 2016ம் ஆண்டில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் புள்ளி விபரத்தினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த கடல் உற்பத்தியானது 2015ம் ஆண்டினைவிடவும் 2016ல் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது. கிளிநொச்சியில் 2015ம் ஆண்டில் 11 ஆயிரத்து 189 மெற்றிக் தொன் கடல் உற்பத்தி பெறப்பட்டுள்ளபோதிலும் இந்த அளவானது 2016ம் ஆண்டில் 10 ஆயிரத்து 338 மெற்றிக் தொன்னாகவே கானப்படுகின்றது.

இவ்வாறு யுத்தத்திற்குப் பின்பு சற்று வளர்ச்சிப்போக்கில் கானப்பட்ட கடல் உற்பத்தியானது கடந்த ஆண்டு 851 மெற்றிக் தொன்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை 2015ம் ஆண்டளவில் 917 படகுகள் கானப்பட்டபோதிலும் 2016ல் 929 படகுகள் பதியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழிலை மட்டுமே நம்பி 3 ஆயிரத்து 914 குடும்பங்கள் வாழ்கின்றனர். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மூலம் 2016ம் ஆண்டில் சட்டவிரோத மீன்பிடிகள் தொடர்பில் நீதிமன்றஙகளில் 30 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேநேரம் 2015ல் 24 வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.